இங்கிலாந்து எதிரான முதல் டி20 - புது சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா
- இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
- சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று (ஜனவரி 23) கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
ஒருபக்கம் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்திய அணி 12.5 ஓவர்களில் 133 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.
இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் இடம்பெற்றுள்ளார். இவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.