கிரிக்கெட் (Cricket)

12 விக்கெட்டுகள்.. சதம்.. ரஞ்சி டிராபியில் தனி ஆளாக கலக்கும் ஜடேஜா, ஷர்துல் தாகூர்

Published On 2025-01-24 20:14 IST   |   Update On 2025-01-24 20:14:00 IST
  • ஜடேஜா, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தினார்.
  • ஷர்துல் தாகூர் முதல் இன்னிங்சில் அரை சதமும் 2-வது இன்னிங்சில் சதமும் விளாசியுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் சௌராஷ்ட்ரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி முதல் இன்னிங்சில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் படோனி 60, யாஷ் துள் 44 ரன்கள் எடுத்தார்கள். சௌராஷ்ட்ரா அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

அதற்கடுத்ததாக களம் இறங்கிய சௌராஷ்ட்ரா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 271 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 38 (36) ரன்கள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியை ரவீந்திர ஜடேஜா தனியாளாக சுருட்டி வீசினார். அவர் மொத்தம் 12.2 ஓவரில் 38 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய அற்புதமான பவுலிங் காரணமாக டெல்லி அணி 94 ரன்களில் சுருண்டது.

இதனால் 12 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை எளிதாக வென்ற சௌராஷ்ட்ரா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மொத்தம் 12 விக்கெட்டுகள், 38 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை- ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதி வருகிறது. முதல் இன்னிங்சில் மும்பை அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் அய்யர், துபே, ரகானே ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அந்த அணியில் அதிக பட்சமாக ஷர்துல் தாகூர் அரை சதம் விளாசினார்.

இதனால் மும்பை அணி 120 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 206 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை மீண்டும் தடுமாறியது. 54 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மும்பை 101 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஷர்துல் தாகூர் - தனுஷ் கோட்டியன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் சதம் விளாசியும் தனுஷ் கோட்டியன் அரை சதம் விளாசியும் அசத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 274/7 என்ற நிலையில் உள்ளது.

ரஞ்சிக் கோப்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், துபே உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்கள் சுமாராக விளையாடி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

Tags:    

Similar News