செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜோ ரூட் இரட்டை சதம்

Published On 2016-07-23 19:42 IST   |   Update On 2016-07-23 19:45:00 IST
ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. கேப்டன் அலைஸ்டர் குக் சதம் அடித்து 105 ரன்னில் அவுட் ஆனார். இது அவரின் 29-வது சதமாகும். குக்கை தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரூட் 141 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வோக்ஸ் அரைசதம் அடித்து 58 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 150 ரன்னைக் கடந்தார்.

தொடர்ந்து பந்துகளை விளாசிய அவர் தனது 2-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 355 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை எட்டினார். இவரது இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி 131.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 471 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டோக்ஸ 34 ரன்கள் எடுத்த நிலையில் வகாப் ரியாஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இந்திய நேரப்படி இரவு 7.40 மணி நிலவரப்படி ஜோ ரூட் 212 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 27 ரன்னுடனும் விளையாடி வருகிறார்கள். இங்கிலாந்து அணி 138 ஓவர்கள் முடிவில் 512 ரன்கள் சேர்த்துள்ளது.

Similar News