செய்திகள்

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 117 ரன்னில் சுருண்டது

Published On 2016-07-26 14:17 IST   |   Update On 2016-07-26 14:17:00 IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஹசில்வுட், லயன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 117 ரன்னில் சுருண்டது.
பல்லேகெலே:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணியின் கருணாரத்னே, கவுசல் சில்வா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 6 ரன்னாக இருக்கும்போது கருணாரத்னே விக்கெட்டை மிட்செல் ஸ்டார்க் சாய்த்தார். இதன்மூலம் காயத்தில் இருந்து மீண்டு நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய ஸ்டார்க் அசத்தினார்.

அதன்பின் இலங்கை விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லயன் ஆகியோரின் அபார பந்து வீச்சால் 34.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 117 ரன்னில் சுருண்டது. ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஓ'கீபே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் பாதியிலேயே காயம் காரணமாக வெளியேறிய வார்னர் இந்த டெஸ்டில் இடம்பிடித்திருந்தார். அவர் 5 பந்துகளை சந்தித்த நிலையில் பிரதீப் பந்தில் க்ளீன் போல்டாகி டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பர்ன்ஸ் 3 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் கேப்டன் ஸ்மித் இணைந்தார்.

ஆஸ்திரேலியா மதியம் 2 மணி நிலவரப்படி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Similar News