செய்திகள்

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

Published On 2017-06-24 11:46 IST   |   Update On 2017-06-24 11:46:00 IST
‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
சென்னை:

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. இதன் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) முதல் ஜூலை 2-ந் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு கைப்பந்து சங்க துணை சேர்மன் பி.பாலச்சந்திரன் தலைமை தாங்குகிறார். சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, ரோமா குழும நிர்வாக இயக்குனர் ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்கள்.

ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, எஸ்.டி.ஏ.டி., எஸ்.ஆர்.எம்.அகாடமி, செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி, அக்னி பிரண்ட்ஸ், சென்னை மாநகர போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படை, டி.ஜி.வைஷ்ணவா, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 26 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் காலை 7 மணிக்கும், மாலை 5 மணிக்கும் தொடங்கி நடைபெறும்.

லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் லீக் சுற்றில் 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். சூப்பர் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதன் பெண்கள் பிரிவு லீக் ஆட்டம் வருகிற 26-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு போலீஸ், இன்போசிஸ், லைப் ஸ்போர்ட்ஸ், செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் அணிகளும், ‘பி’ பிரிவில் எஸ்.டி.ஏ.டி., எஸ்.ஆர்.எம்., வின்னிஸ், எஸ்.டி.ஏ.டி.விடுதி, நெல்லை பிரண்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார். 

Similar News