செய்திகள்

கும்ப்ளே இடத்தில் பயிற்சியாளர் பதவிக்கு ஷேவாக் பொருத்தமானவர்: அஜீத்வடேகர்

Published On 2017-06-24 12:14 IST   |   Update On 2017-06-24 12:14:00 IST
கும்ப்ளே இடத்தில் பயிற்சியாளர் பதவிக்கு ஷேவாக் பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அஜீத் வடேகர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே திடீரென பதவி விலகினார்.

கேப்டன் வீராட்கோலியுடன் ஏற்பட்ட மோதலால் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

பயிற்சியாளர் பதவிக்கு ஷேவாக், லால்சந்த் ராஜ்புத், தோடாகணேஷ் (இந்தியா) டாம்மோடி (ஆஸ்திரேலியா), ரிச்சர்டு பைபாஸ் (இங்கிலாந்து) ஆகிய 5 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கு ஜூலை 9-ந்தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மேலும் திறமையானவர்களை அடையாளம் கான முடியும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

இந்த நிலையில் கும்ப்ளே இடத்தில் பயிற்சியாளர் பதவிக்கு ஷேவாக் பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அஜீத் வடேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளே கடந்த 1 ஆண்டாக மிகவும் சிறப்பாக செயல்பட்டார். வலிமையான இந்திய அணியை உருவாக்கினார். எனவே அவரை நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை கும்ப்ளே இடத்தில் தற்போது ஷேவாக்கை தேர்வு செய்யலாம். அவர் தான் சிறந்தவராக திகழ்கிறார்.



நான் பயிற்சியாளராக பணியாற்றிய போது கும்ப்ளே அணியில் இருந்தார். அணியில் உள்ள மிக சிறந்த நபர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.நன்கு படித்தவர். அவர் விளையாட்டின் மீது உண்மையான பைத்தியமாக இருந்தார். வெற்றி ஒன்றே அவரது கவனமாக இருந்தது.

அவரது ராஜினாமா கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கும் கேப்டன் கோலிக்கும் இடையே எப்படி புரிந்துணர்வு இல்லாமல் போனது என்று உண்மையிலேயே தெரியவில்லை. கும்ப்ளே போன்ற ஒரு சிறந்த மாணிக்கத்தை இந்திய அணி இழந்து விட்டது.

இவ்வாறு அஜீத்வடேகர் கூறியுள்ளார்.

Similar News