செய்திகள்
பத்மஸ்ரீ விருதுக்கு பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை
2017-ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுக்கு பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுக்கு பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தின் பெயரை முன்னாள் விளையட்டுத்துறை இணை மந்திரி விஜய் கோயல் பரிந்துரை செய்தார்.
ஸ்ரீகாந்த சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில் தங்கப்பதக்கம் வென்றார். அதற்கு முன்னதாக நடைபெற்ற டென்மார்க் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் இந்தோனேசியன் ஓபன் தொடரிலும் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம், ஒரே ஆண்டில் நான்கு பேட்மிண்டன் சூப்பர் சீரீஸ் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
சிங்கப்பூர் ஓபன் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த வெற்றிகளையடுத்து உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு ஸ்ரீகாந்த் முன்னேறினார். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சுவிஸ் ஓபன் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரீகாந்த் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.