செய்திகள்
4 விக்கெட் வீழ்த்தி மெஹிதி ஹசன்

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 259 ரன்னில் ஆல்அவுட்

Published On 2021-02-05 16:16 IST   |   Update On 2021-02-05 16:16:00 IST
வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியுள்ளது.
வங்காளதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சதம் (103) விளாசினார். ஷத்மான் இஸ்லாம் 59 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 68 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். ஜெர்மைன் பிளாக்வுட் 68 ரன்களும், கைல் மேயர்ஸ் 40 ரன்களும், ஜோஷுவா டி சில்வா 42 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும் தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 171 ரன்கள் முன்னிலைப் பெற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வங்காளதேசம் 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Similar News