விளையாட்டு

தடையால் அதிர்ச்சி இல்லை.. பாஜகவில் இணைந்தால் என் மீதான தடை நீக்கப்படும்: பஜ்ரங் புனியா

Published On 2024-11-28 04:56 GMT   |   Update On 2024-11-28 04:56 GMT
  • ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்.
  • அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன்.

ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த தடையால் நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த ஓராண்டாகவே இதற்கான முயற்சி நடந்தது. ஏற்கனவே சொன்னது மாதிரி, ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊழியர்கள் எனது வீட்டிற்கு வந்து மாதிரியை கேட்ட போது அவர்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் பழையது. காலாவதியானது என்பதை கண்டறிந்து தான் சிறுநீர் மாதிரியை கொடுக்கவில்லை.

இந்த விவரங்களை அப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தங்களின் தவறை ஏற்கவில்லை. கடந்த 10-12 ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். எல்லா விளையாட்டு தொடர், பயிற்சி முகாம்களின் போது ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரியை வழங்கி இருக்கிறேன்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன். இந்த அரசாங்கத்தின் நோக்கம் எனது உத்வேகத்தை சீர்குலைத்து, என்னை தலைவணங்க வைக்க வேண்டும் என்பது தான். ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்' என்றார்.

Tags:    

Similar News