நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம்
- உ.பி.வாரியர்ஸ் அணியுடனான போட்டியின் போது ஹர்மன்பிரீத் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- அவருக்கு ஆதரவாக சக வீராங்கனை அமெலியா கெர்ரும் நடுவரிடம் ஏதோ கூறினார்.
லக்னோ:
மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து 4-வது வெற்றியை தனதாக்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பந்து வீசிய மும்பை அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
இதனால் உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 3 பீல்டர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என்று நடுவர் அஜிதேஷ் அர்கால் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் அறிவுறுத்தினார்.
இந்த முடிவால் அதிருப்தி அடைந்த ஹர்மன்பிரீத் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சக வீராங்கனை அமெலியா கெர்ரும் நடுவரிடம் ஏதோ கூறினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த உ.பி.வாரியர்ஸ் வீராங்கனை சோபி எக்லெஸ்டோனிடமும் கையை நீட்டி கோபமாக விவாதித்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், ஹர்மன்பிரீத் கவுருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.