சாம்பியன்ஸ் டிராபியை வென்றாலும் கேள்விக்குறியாகும் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி!
- நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களை இழந்த பிறகு ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
- அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு நிலையான கேப்டனை பிசிசிஐ விரும்புவதாக தகவல்.
தொடக்க வீரரான ரோகித் சர்மா மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார். ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. வருகிற ஏப்ரல் மாதம் வந்தால் 38 வயது பிறக்கும்.
கடந்த வருடம் இறுதியில் நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா இதுவரை இல்லாத வகையில் மிகவும் மோசமான வகையில் 0-3 என இழந்தது.
அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என இந்தியா தொடரை இழந்தது. இதனால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த இரண்ட தொடரிலும் ரோகித் சர்மா மோசமாக விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் தானாகவே ஆடும் லெவனில் இருந்து வெளியேறினார். இதனால் ரோகித் சர்மாவின் ஃபார்ம் மற்றும் கேப்டன் பதவி குறித்து விமர்சனம் எழுந்தது.
ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் பிசிசிஐ, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடன் இந்தியாவின் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது.
அப்போது 2027 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றிற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியபோது அடுத்த இரண்டு மூன்று வருடத்திற்கு நிலையான கேப்டனுடன் செல்ல வேண்டிய அவசியம். இதனால் ரோகித் சர்மாவுடன் செல்ல முடியாது. இதனால் புதிய கேப்டனை தயார் செய்ய வேண்டும் என பிசிசிஐ முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.
மேலும் ரோகித் சர்மாவிடம் உங்களுடைய எதிர்காலம் திட்டம் குறித்து முடிவு எடுக்கக் கூறியதாகவும் கேட்டுக்கொண்டதாக தகவல வெளியானது. ரோகித் சர்மாவும் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என தெரிவித்தாகவும் தகவல் வெளியானது.
இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பிசிசிஐ அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டனாக நியமித்தது. சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக நியமித்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் ரோகித் சர்மா ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஃபார்ம் கவலை அளிப்பதாக இருந்தாலும் கேப்டன் பொறுப்பில் அற்புதமாக செயல்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.
ஒருநாள், டி20, டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய நான்கு ஐசிசி தொடர்களிலும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்த நிலையில்தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
அவர் தற்போது ஓய்வு பெறும் முடிவில் இல்லை. இன்னும் சில காலம் விளையாட விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆகவே, பிசிசிஐ அவரை ஒரு வீரரான விளையாட அனுமதித்தாலும் கூட, அடுத்த இரண்டு மூன்று வருடத்திற்கான திட்டத்தில் கேப்டனாக நீடிக்க பிசிசிஐ விரும்புவா? எனத் தெரியவில்லை.
இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினாலும் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் திட்டத்தில் ரோகித் சர்மா இருப்பாரா? என்பது சந்தேகம்தான். இதனால் அவருடைய கேப்டன் பதவிக்கு ஆபத்து நீடிக்கத்தான் செய்கிறது.
எதுவாக இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிந்த பின் பிசிசிஐ முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியே வந்தபின்னர்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்த உறுதியான நிலை தெரியவரும்.
இதற்கிடையே பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் பிரிவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா இடம் பிடிப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் மட்டுமே ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.