இறுதிப்போட்டியில் எதுவும் நடக்கலாம்- நியூசிலாந்து வீரர் வில்லியம்சன்
- இந்தியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
- ரச்சின் ரவீந்திராவிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வெளியேற்றி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வருகிற 9-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இந்தியாவுடன் மோத உள்ளது. இது குறித்து நியூசிலாந்து முன்னணி பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், 'இந்தியா ஒரு அற்புதமான அணி, அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே இந்தியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இறுதிப்போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்த ஆட்டத்தை போன்று அங்கு சூழ்நிலை மீண்டும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது போது இங்குள்ள (துபாய்) சீதோஷ்ண நிலை முற்றிலும் வித்தியாசமானது. இறுதி ஆட்டத்தில், எங்களது திட்டத்தை தெளிவாக செயல்படுத்த வேண்டியது முக்கியம். ரச்சின் ரவீந்திராவிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருக்கிறது. அவருடன் இணைந்து பேட் செய்வது எப்போதும் உற்சாகமாக இருக்கும்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். இருப்பினும் இறுதிப்போட்டி மீது எங்களது கவனத்தை விரைவாக மாற்றுவோம். கோப்பையை வெல்ல இது எங்களுக்கு அருமையான வாய்ப்பாகும்' என்றார்.
மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கூறுகையில், 'துபாய் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு அதிகமாக தெரியாது. இந்தியாவுக்கு எதிரான லீக்கில் அங்கு விளையாடிய போது பந்து நன்கு சுழன்று திரும்பியதை பார்த்தோம். ஆனால் இன்னொரு நாள் பந்து பெரிய அளவில் சுழன்று திரும்பவில்லை. எனவே ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். ஓரிரு நாளில் ஆடுகளத்தை பார்ப்போம். இது சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.
நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி லீக் சுற்றில் இந்தியாவிடம் 44 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.