ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதல் 10 இடத்தில் 4 இந்திய வீரர்கள்- 2-வது இடத்தில் சுப்மன் கில்
- ரோகித் சர்மாவை 2-வது இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளியுள்ளார் சுப்மன் கில்.
- விராட் கோலி 4 இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நாக்பூர் (87) மற்றும் கட்டாக் (60) போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுப்மன் கில் 781 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க 5 புள்ளிகள்தான் தேவை.
இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டியில் பாகிஸ்தான் இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடினால் முதல் இடத்தில நீடிக்க வாய்ப்புள்ளது.
கட்டாக் போட்டியில் சதம் (119) விளாசினாலும் ரோகித் சர்மா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவர் 773 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். நாக்பூர் போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.
அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு இடங்கள் முன்னனேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.