null
3-வது ஒருநாள் போட்டி: அரைசதம் அடித்ததுடன் சாதனைப் படைத்த விராட் கோலி, சுப்மன் கில்
- சுப்மன் கில் 25 ரன்களை எடுத்தபோது 2500 ரன்களை விரைவாக கடந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
- விராட் கோலி 3 நாடுகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இந்தியா 10 ஓவரில் 52 ரன்களை கடந்தது.
17-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில் அரைசதம் அடித்தார். இந்த தொடரின் 3-வது அரைசதம் இதுவாகும். அவர் 51 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் விராட் கோலி அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 19 ஓவரில் 122 ரன்னாக இருக்கும் போது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 55 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கியுள்ளார். சுப்மன் கில்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.
இன்றைய போட்டியில் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் மூன்று அணிகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5393 ரன்களும், இலங்கைக்கு எதிராக 4076 ரன்களும் அடித்துள்ளார்.
சுப்மன் கில் 25 ரன்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2500 ரன்களை தொட்டார். இது அவருடைய 50-வது ஒருநாள் போட்டியாகும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2500 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.