கிரிக்கெட் (Cricket)
null

சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி அபாரம்- இங்கிலாந்துக்கு 357 ரன் இமாலய இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2025-02-12 17:17 IST   |   Update On 2025-02-12 17:21:00 IST
  • சுப்மன் கில் 102 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 112 ரன்கள் விளாசினார்.
  • ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்களும், விராட் கோலி 55 பந்தில் 52 ரன்களும் சேர்த்தனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இந்தியா 10 ஓவரில் 52 ரன்களை கடந்தது.

17-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில் அரைசதம் அடித்தார். இந்த தொடரின் 3-வது அரைசதம் இதுவாகும். அவர் 51 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

 மறுமுனையில் விராட் கோலி அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 19 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 55 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். சுப்மன் கில்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.

சுப்மன் கில் உடன் இணைந்து ஷ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக விளையாடினார்.

சுப்மன் சில் 95 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் ஷ்ரேயாஸ் அய்யர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 226 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 112 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தது.

 சுப்மன் கில் அவுட்டான சிறிது நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்குார் 38.2 ஓவரில் 259 ரன்னாக இருந்தது.

கே.எல். ராகுல் 29 பந்தில் 40 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 9 பந்தில் 17 ரன்களும், அக்சார் படேல் 12 பந்தில் 13 ரன்களும் இந்தியாவின் ஸ்கோர் 350 ரன்களை தாண்டியது. 49-வது ஓவரில் ஹர்ஷித் ராணா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் இந்தியா 3 ரன் எடுத்து 2 விக்கெட்டை இழக்க சரியாக 50 ஓவரில் 356 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 357 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Tags:    

Similar News