ஐபிஎல் 2025: புதிய கேப்டனுடன் களமிறங்கும் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர்.- ஓர் அலசல்
- ரகானே, டி காக், குர்பாஸ், சுனில் நரைன் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.
- ஹர்ஷித் ராணா, வரண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு.
ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
சாம்பியன் பட்டத்திற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. கடந்த வருடத்தை போன்று இந்த வருடம் ஒரு அணியை மதிப்பிட இயலாது. ஏனென்றால் மெகா ஏலம் நடைபெற்ற பல வீரர்கள் மாறியுள்ளன.
பேட்ஸ்மேன்கள்
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் குறித்து ஒரு பார்வை...
ரகானே தலைமையில் கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது. அந்த அணியில் ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள்
வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள்
அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்ந்தெடுப்பதுதான் அந்த அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தொடக்க வீரர்கள்
தொடக்க வீரராக ரகானே, குர்பாஸ், டி காக் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களுடன் சுனில் நரைன் உள்ளார். இவரை தொடக்க வீரராக களம் இறக்கி பவர் பிளேயில் முடிந்த அளவிற்கு ரன்கள் குவிப்பதுதான் கொல்கத்தா அணியின் நோக்கம். கடந்த பல சீசன்களில் அவர் அதை சரியாக செய்துள்ளார்.
ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினால் பவர் பிளேயை சரியாக பயன்படுத்திக் கொள்வார். மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவாரா? என்பது ஆடும்போதுதான் தெரியும்.
டி காக் தொடக்க வீரராக களம் இறங்கக்கூடியவர். இவர் விக்கெட் கீப்பர் பணியையும் செய்வதால் குர்பாஸ், டி காக் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இரவரிடையே கடும் போட்டி நிலவும்.
ஒருவேளை ரகானே தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டால், சுனில் நரைன் கடைநிலை வீரரான களம் இறங்குவார்.
மிடில் ஆர்டர் வரிசை
மிடில் ஆர்டர் வரிசையில் துணைக் கேப்டன் வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மணிஷ் பாண்டே, ரிங்கு சிங், ராமன்தீப் சிங், ஆந்த்ரே ரஸல் என ஒரு பட்டாளத்தை கொண்டுள்ளது. அவர்களுக்கு மிடில் ஆர்டரில் எந்த சிரமும் இருக்க வாய்ப்பில்லை.
வேகப்பந்து வீச்சு
இந்திய வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, சக்காரியா ஆகியோரில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா ஆடும் லெவனில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஹர்ஷித் ராணா ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியிலும் சிறப்பான விளையாடினார். இதனால் அவருக்கு கூடுதல் அனுபவம் ஏற்பட்டிருக்கும். விக்கெட் வீழ்த்தும் திறன் அவருக்கு உள்ளது. வைபவ் ஆரோராவும் நல்லவிதமாக உள்ளார்.
அன்ரிச் நோர்ஜே, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இவர்களுடன் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரசல் உள்ளார்.
இதனால் மூன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். இவர்களுடன் தேவைப்பட்டால் ஆந்த்ரே லஸல், வெங்கடேஷ் அய்யராலும் பந்து வீச முடியும். வெங்கடேஷ் அய்யர் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.
சுழற்பந்து வீச்சு
சுழற்பந்து வீச்சில் மிஸ்ட்ரி ஸ்பின்னர் என அழைக்கப்படும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தியை கொண்டுள்ளது.
இதனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூடுதலாக இரண்டு ஆல்-ரவுண்டர் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இருப்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிக சமநிலை கொண்ட அணியாக திகழும் என்பதில் எந்த ஐயம் இல்லை..
ஆனால், பந்து வீச்சாளர்கள் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் அணிக்கு கைக்கொடுப்பார்களா? என்பது சற்று சந்தேகம்தான்.
இதனால் நடப்பு சாம்பியமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வெல்ல ஆர்வமாக களம் இறங்கும்.