கிரிக்கெட் (Cricket)

வெவ்வேறு தலைமுறை கிரிக்கெட் வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல- கபில்தேவ்

Published On 2025-01-14 10:53 IST   |   Update On 2025-01-14 10:53:00 IST
  • டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள்.
  • எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது.

புதுடெல்லி:

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் அவர் வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலரான கபில்தேவின் (51 விக்கெட்) சாதனையை முறியடித்தார்.

இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டனான 66 வயதான கபில்தேவ், கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிட்டு பேசுவது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.

இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-

தயவு செய்து கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிடாதீர். ஒரு தலைமுறை வீரர்களை, மற்றொரு தலைமுறையினருடன் ஒப்பிடக்கூடாது. அது தேவையில்லாத ஒன்று. டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள். ஆனால் எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது. அதனால் தான் இருவேறு தலைமுறையினருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்று சொல்கிறேன்.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோரை நீக்கியது சரியான முடிவா? என்று கேட்கிறீர்கள். அது குறித்த நான் எப்படி கருத்து சொல்ல முடியும். இது தேர்வாளர்களின் வேலை. அதனால் நான் ஏதாவது சொன்னால் அது தேர்வாளர்களை குறைசொல்வதாகி விடும். அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை.

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகப்பெரிய வீரர்கள். விளையாடுவதற்கு சரியான நேரம் எது, ஓய்வு பெற வேண்டிய தருணம் எது என்பது அவர்களுக்கு தெரியும்.

என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News