இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியிருக்கும்- பாக், முன்னாள் வீரர் கணிப்பு
- இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
- இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.
கராச்சி:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரின் முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்க தேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணிலும் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணிலும் பாகிஸ்தான் வீழ்த்திய விதம் வெளிநாடுகளில் அவர்களுடைய பலத்தை காண்பிக்கிறது. அந்த சமீபத்திய செயல்பாடுகளை வைத்து இம்முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
ஆனால் இந்திய அணி தங்களுடைய சமீபத்திய மோசமான தோல்விகளால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து அழுத்தத்திற்குள் தவிக்கிறது. அப்படிப்பட்ட இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்தியாவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளராக முன்னின்று அணியை வழி நடத்தி வருகிறார். அவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் அட்டாக்கின் பலம் 40 - 50 சதவீதமாக குறைந்து விடும்.
என்று கூறினார்.