வீடியோ: மார்கஸ் ஸ்டோய்னிஸ் அவுட்: வியந்து பார்த்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்
- இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.
- பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது.
பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை இழந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இன்னிங்சின் 8-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சர் அடிக்கும் முயற்சியில் விளாசினார். அதனை கேன் ரிச்சர்ட்சன் கேட்ச் பிடித்தார்.
இருப்பினும் இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றதால், பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அது மேற்கூரையில் படாமல் ஃபீல்டரிடம் சென்றதையடுத்து அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டொய்னிஸ் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இப்போட்டியை காண உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சும் மைதானத்தில் இருந்தார். இந்த கேட்சைப் பார்த்த அவரும் என்ன நடந்தது என நம்பமுடியாமல் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தார். ஸ்டோய்னிஸ் விக்கெட் இழந்த விதத்தைப் பார்த்து ஷாக்கான ஜோகோவிச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.