கிரிக்கெட் (Cricket)
கடைசி டி20 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது

கடைசி டி20 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது

Published On 2025-03-26 14:58 IST   |   Update On 2025-03-26 14:58:00 IST
  • நீஷம் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
  • செய்ஃபர்ட் 38 பந்தில் 6 பவுண்டரி, 10 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசினார்.

பாகிஸ்தான் அணி ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நியூசிலாந்து சென்றுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றி 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது போட்டியில் மட்டும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது.

நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சல்மான் ஆகா தாக்குப்பிடித்து 39 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதாப் கான் 28 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 11 ரன் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்கள் மட்டுமே அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் நீஷம் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டும், பென் சியர்ஸ் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட் அபாரமாக விளையாடினார் மறுமுனையில் பின் ஆலன் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சாப்மேன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். செய்ஃபர்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 97 ரன்கள் விளாச நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் செய்ஃபர்ட் 6 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியுள்ளது. நீஷம் ஆட்டநாயகன் விருதம், டிம் செய்ஃபர்ட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

Tags:    

Similar News