சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸ்திரேலிய கேப்டன் விளையாடுவது சந்தேகம்
- ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது.
- பேட் கம்மின்ஸ்-க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன. பிப்.19-ந்தேதி கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்கேன் செய்ய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
வருகிற 29-ந் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து கம்மின்ஸ் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.