கைநழுவும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- முதலில் முல்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
போட்டியை நடத்தும் மைதானங்கள் ஐ.சி.சி. நிர்ணயித்துள்ள விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர் பற்றிய தகவல்களில் உண்மையில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் துவங்கும் முன்பு தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான போட்டிகள் முதலில் முல்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் இந்தப் போட்டிகள் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது.
மேலும், அடுத்த மாதம் துவங்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு அந்த இடங்களில் புதுப்பித்தல் பணிகள் தாமதமாகி நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.
லாகூரில் உள்ள கடாபி மைதானம், கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் மைதானத்தில் புதுப்பித்தல் பணிகள் காலக்கெடுவிற்குள் அல்லது அதற்கு முன்பாகவோ முடிந்துவிடும் நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியான தகவல்களில், "இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம். மூன்று மைதானங்களும் இன்னும் தயாராகவில்லை. இங்கு நடப்பது புதுப்பித்தல் பணிகள் இல்லை. சீரான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இருக்கைகள், ஃப்ளட்-லைட்கள், வெளிப்புற மைதானம் மற்றும் விளையாட்டு மேற்பரப்புகள் உட்பட நிறைய வேலைகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் தான் உள்ளன," என்று கூறப்பட்டது.
பொதுவாக, எந்தவொரு சர்வதேச போட்டியையும் நடத்தும் நாடுகள், தரச் சரிபார்ப்பை மேற்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ICC) முன்கூட்டியே ஒப்படைக்க வேண்டியது வழக்கம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காலக்கெடுவைத் தவறவிட்டால் மற்றும் மைதானங்கள் ஐ.சி.சி. சரிபார்ப்பு பட்டியலை பூர்த்தி செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குரிய விஷயம் தான். முழுமையாக தயாராகாத இடங்களில் போட்டியை நடத்த முடியாது. அடுத்த வாரம் இதுகுறித்து முழு விவரங்கள் தெரியவரும்.