கிரிக்கெட் (Cricket)

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Published On 2024-10-04 14:05 GMT   |   Update On 2024-10-04 14:05 GMT
  • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் பந்துவீச்சு தேர்வு செய்தது.
  • ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஹேலே மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் முறையே 10 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டஃபைன் டெய்லர் பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் இணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தது.

ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய நொன்குலேகோ லாபா 4 விக்கெட்டுகளையும், மரிசேன் கப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீராங்கனைகளான கேப்டன் லாரா வொல்வூராட் மற்றும் டாஸ்மின் ப்ரிட்ஸ் முறையே 59 மற்றும் 57 ரன்களை அடித்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

Tags:    

Similar News