விளையாட்டு

1,021 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 26.69 கோடி ஊக்கத்தொகை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2025-01-07 19:23 IST   |   Update On 2025-01-07 19:23:00 IST
  • Deputy Chief Minister Udhayanidhi Stalin gave Rs. 26.69 crore as incentives to 1,021 sportspersons
  • விளையாட்டு அரங்கம், விளையாட்டு அகாடமிக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (7.1.2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் காமன்வெல்த் வாள்வீச்சு மற்றும் செஸ் போட்டி, ஆசிய அளவிலான தடகளம், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், நீச்சல் போட்டி, ஆசிய மற்றும் சர்வதேச ஸ்குவாஷ், பாரா பாட்மிண்டன் போட்டிகள், இன்டர்நேஷனல் மாஸ்டர் (International Master) பட்டம் பெற்ற செஸ் வீரர்கள், தேசிய அளவிலான தடகளம், நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, ரோலர் ஸ்கேட்டிங், வூஷு (Wushu), சாப்ட் டென்னீஸ் (Soft Tennis), சைக்கிளிங், பளுதூக்குதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பாரா தடகளம், பாரா நீச்சல், பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் மற்றும் தேசிய பள்ளிக் குழுமப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் என மொத்தம் 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 26.69 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய தடகள போட்டிகள், இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, தேசிய பள்ளிக் குழுமப் போட்டி உள்ளிட்ட சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர்கள் (Sports Hostel), உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (Elite Sportspersons Scheme), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme) ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் வீரர், வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் மைல்கல்லாக, மிகப் பெரிய எழுச்சியாக போற்றப்படுகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பதவியேற்றதிலிருந்து (7.5.2021 முதல்) இதுநாள் வரை சர்வதேச, ஆசிய, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதங்கங்கள் வென்ற 4,352 வீரர், வீராங்கனைகளுக்கு 143.85 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி ஒலிம்பிக் அகாடமியின் முதற்கட்ட பணிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 42.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி,

திருச்சிராப்பள்ளி, மதுரை, கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட விளையாட்டு அரங்க வளாகங்கள், சேலம் மாவட்ட பல்நோக்கு உள்விளையாட்டரங்க வளாகம் ஆகியவற்றில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய பாரா விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ரூ. 4.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உள்விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., அர்ஜூனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் திரு.ஞா.சத்யன், அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பராலிம்பிக்ஸ் பதக்க வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையிலா் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News