விளையாட்டு

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி 18 டெஸ்டில் ஆடுகிறது

Published On 2025-01-07 10:20 IST   |   Update On 2025-01-07 10:20:00 IST
  • இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது.
  • இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் பெற்றது.

21-23-ல் நடைபெற்ற 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்திய அணி இந்த 2 தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை இழந்தது.

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஜூன் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி தொடரில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை தவறவிட்டது.

2025-27-ம் ஆண்டுக்கான 4-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 18 டெஸ்டில் விளையாடுகிறது. ஜூன்-ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று இந்திய அணி 5 டெஸ்டில் பங்கேற்கிறது. இதோடுதான் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீசுடன் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) தென் ஆப்பிரிக்காவுடன் உள்ளூரில் 2 டெஸ்டில் ஆடுகிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று 2 டெஸ்டிலும், அக்டோபர்-டிசம்பர் மாதம் நியூசிலாந்து சென்று 2 டெஸ்டிலும் பங்கேற்கிறது.

இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது. சொந்த மண்ணில் இந்த தொடர் நடைபெறும்.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி உள்ளூரில் 9 டெஸ்டிலும், வெளிநாட்டில் 9 டெஸ்டிலும் விளையாடுகிறது. 

Tags:    

Similar News