பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் 3 பேருக்கு ஆயுட்கால தடை
- 3 வீரர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுக்கு ஆயுட் கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வசதியாக நாட்டுக்கு திரும்ப கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது.
லாகூர்:
ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, போலந்தில் கடந்த மாதம் நடந்த நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த வீரர்களான முர்தசா யாகூப், இஹ்தேஷம் இஸ்லாம், அப்துர் ரஹ்மான் மற்றும் பிசியோதெரபிஸ்ட் வகாஸ் ஆகியோர் நாடு திரும்பிய பிறகு அதே விசாவை பயன்படுத்தி மீண்டும் நெதர்லாந்து சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததை அடுத்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் நிர்வாக குழுவில் ஆலோசனை நடத்தி சம்பந்தப்பட்ட 3 வீரர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுக்கு ஆயுட் கால தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வசதியாக நாட்டுக்கு திரும்ப கொண்டு வர பாகிஸ்தான் தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேல் நடவடிக்கைக்காக உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் சார்பில் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.