ரூ. 450 கோடி ஊழல் புகார்.. சுப்மன் கில்-க்கு சம்மன் அனுப்ப சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு?
- பூபேந்திரசிங் ஜாலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
- மொத்தமாக ரூ.175 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வீரர் சுப்மன் கில்-க்கு குஜராத் சி.ஐ.டி. குற்றப்பிரிவு சார்பில் விசாரணைக்கு ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 450 கோடி ஊழல் தொடர்பாக இந்திய வீரர் சுப்மன் கில் மட்டுமின்றி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சாய் சுதர்சன், ராகுல் தேவாடியா மற்றும் மோகித் சர்மா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அகமதாபாத் மிரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போன்சி திட்டங்களின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் பூபேந்திரசிங் ஜாலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிரிக்கெட் வீரர்கள் முதலீடுகளை திருப்பித் தர தவறிவிட்டதை ஜாலா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாலா, குஜராத் மாநிலத்தின் தலோத், ஹிம்மத்நகர் மற்றும் வதோதரா உள்பட பல மாவட்டங்களில் அலுவலகங்களை திறந்து, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க முகவர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஐ.டி.எஃப்.சி. வங்கிகள் மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி வரையிலான நிதி பரிவர்த்தனைகள் மூலம், மொத்தமாக ரூ.175 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
2024 ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கில், இத்திட்டத்தில் ரூ.1.95 கோடி முதலீடு செய்ததாகவும், மோஹித் ஷர்மா, டெவாடியா மற்றும் சுதர்சன் ஆகியோர் சிறிய தொகைகளை முதலீடு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஜாலா 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. ஜாலா ஒரு அதிகாரப்பூர்வமுற்ற கணக்கு புத்தகத்தை பராமரித்து வந்ததாகவும், அதை சி.ஐ.டி. குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.