ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் விளாசி ஆப்கானிஸ்தானை சரிவில் இருந்து மீட்ட ரஹ்மத் ஷா
- முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157 ரன்னில் சுருண்டது.
- ஜிம்பாப்வே 243 ரன்கள் சேர்த்தது.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டில் மழை பெய்ததால் நீண்ட நேரத்திற்குப் பின் போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 157 ரன்னில் சுருண்டது. பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்கள் சேர்த்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 86 ரன்கள் பின் தங்கியிருந்தது. அதனுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருந்தது. ரஹ்மத் ஷா 18 ரன்களுடனும், ஷியா-உர்-ரஹ்மான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஷியா-உர்-ரஹ்மான் 6 ரன்னிலும், அடத்து வந்த அஃப்ர் ஜஜாய் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
என்றாலும் மறுமுனையில் ரஹ்மத் ஷா நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக நின்ற ஷாஹிதுல்லா 22 ரன்கள் அடித்தார்.
7-வது விக்கெட்டுக்க ரஹ்மத் ஷா உடன் இஸ்மாத் அலாம் ஜோடி சேர்ந்தார். ரஹ்மத் ஷா 99 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 209 பந்தில் சதம் விளாசினார்.
இதனால் ஆப்கானிஸ்தான் 200 ரன்களை தாண்டியது. 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஹ்மத் ஷா 126 ரன்களுடனும், இஸ்மாத் அலாம் 39 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.