பும்ராவை கரும்பு சக்கையாக பிழிந்து விட்டார்கள்- கம்பீரை தாக்கிய ஹர்பஜன்
- கரும்பிலிருந்து சாறு உரியப்பட்ட சர்க்கரை போல பும்ரா பயன்படுத்தப்பட்டார்.
- டிராவிஸ் ஹெட் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3 - 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்களுக்குப் பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிபோட்டிக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா, தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
இந்த போராட்டத்திற்கு தோல்வியும் காயமும் மட்டுமே பும்ராவுக்கு கிடைத்தது. இந்நிலையில் பும்ராவின் இந்த நிலைக்கு கடைசி போட்டியில் ரோகித் சர்மா இல்லாத நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியை தவறாக தேர்ந்தெடுத்ததே காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கரும்பிலிருந்து சாறு உரியப்பட்ட சக்கை போல பும்ரா பயன்படுத்தப்பட்டார். டிராவிஸ் ஹெட் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. லபுஸ்ஷேன் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. ஸ்மித் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் மட்டும் எவ்வளவு ஓவர்கள் வீசுவார். அதனால் அவர் கடைசியில் பவுலிங் செய்வதற்கு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஒருவேளை பும்ரா விளையாடி இருந்தாலும் ஆஸ்திரேலியா வென்றிருக்கும். அவர்கள் 6-க்கு பதிலாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருப்பார்கள். கொஞ்சம் கடினமாக வெற்றி பெற்று இருப்பார்கள். ஆனால் நீங்கள் பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்கள். அணி நிர்வாகமான நீங்கள் அவர் எவ்வளவு ஓவர் வீச வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும்.
அதே போல அணி தேர்வும் சரியாக இல்லை. வேகத்துக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் நீங்கள் இரண்டு ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்தீர்கள். இவ்வளவு கிரிக்கெட்டில் விளையாடி பார்த்த எனக்கு அது புரியவில்லை. பிட்ச் பார்த்ததும் எந்த மாதிரியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிறிய விஷயம் கூட உங்களுக்கு தெரியவில்லை.
எனக் கூறினார்.