தொடர் தோல்வி: காம்பீரிடம் விளக்கம் கேட்க வேண்டும்- கவாஸ்கர் வலியுறுத்தல்
- நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது.
- பந்துவீச்சு பயிற்சியாளரிடமும என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 9-ந் தேதி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.
காம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடரை வென்ற பிறகு தற்போது தொடரை இழந்துள்ளது. இந்திய அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் பயிற்சியாளர் காம்பீர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார்.
இந்த நிலையில் தொடர் தோல்வி குறித்து காம்பீரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விளக்கம் கேட்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணி வெவ்வேறு பயிற்சியாளர்களை கொண்ட குழுவை பெற்றுள்ளது. அவர்களின் தகுதி பற்றி எனக்கு தெரியாது. இந்திய அணி தொடர் தோல்வியை தழுவி வருகிறது. பயிற்சியாளர்கள் குழு என்ன செய்து கொண்டு இருந்தது. இது தொடர்பாக காம்பீர் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவிடம் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பேட்டிங் மிகவும் சாதாரணமாக இருந்தது. இதுபற்றி பேட்டிங் பயிற்சியாளரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
பந்துவீச்சு நன்றாக இருந்தாலும் எல்லா பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படவில்லை. பந்து வீச்சாளர்கள் தான் சொல்வதை கேட்கவில்லை என்று பந்துவீச்சு பயிற்சியாளர் சொன்னால் நீங்கள் பவுலர்களிடம் விசாரிக்க வேண்டும். பந்துவீச்சு பயிற்சியாளரிடமும என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.
காம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும், உதவி பயிற்சியாளராக ரியான் டென்னும், பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கலும், பீல்டிங் பயிற்சியாளராக திலீப்பும் உள்ளனர்.