2-வது டெஸ்ட்டிலும் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
- 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 615 ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் அடித்தது. ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ரம் ஷசாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய குர்ரம் ஷசாத் 18 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கம்ரான் குலாம் 28, சவுத் ஷகீல் 23 என விக்கெட்டை இழந்தனர். ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய மசூத் 145 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரிஸ்வான்- சல்மான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.
ரிஸ்வான் 41, சல்மான் 48, ஜமால் 34, ஹம்சா 16 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 478 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 58 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 7.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.