விளையாட்டின் உண்மையான ஜாம்பவான்- ரோகித் செயல் குறித்து ரெய்னா புகழாரம்
- சிறப்பாக செயல்படாததால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் விலகினார்.
- ரோகித் சர்மா நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். இறுதியில் ஆஸ்திரேலியா 181 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியின் டிரிங்ஸ் இடைவெளியின் போது ரோகித் சர்மா மைதானத்திற்குள் வந்து பும்ராவிடம் சில அறிவுரைகளை வழங்கினார். இந்திய அணி வெற்றி பெறுவதற்காக கேப்டன் மற்றும் அணியில் இல்லையென்றாலும் இந்திய அணியின் வெற்றிக்காக எதாவது செய்து கொண்டிருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடாததது அணியின் வெற்றிக்கு பாதிப்பாக இருப்பதால் அணியில் இருந்து வெளியேறி சுயநலமற்ற வீரர் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில் ரோகித் சர்மா விளையாட்டின் உண்மையான ஜாம்பவான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். தனிப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், அவர் அணியின் வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கிறார், தேவைப்படும்போது ஒதுங்குகிறார். தற்போதைய டெஸ்ட் தொடரில் அவரது தலைமை இந்தியாவின் வெற்றிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. விளையாட்டின் உண்மையான ஜாம்பவான்.
என ரெய்னா கூறினார்.