ரோகித் சர்மா ஓய்வு பெற்றால் அதிர்ச்சி அடைய மாட்டேன் - ரவி சாஸ்திரி
- ரோகித் சர்மா ஓய்வு குறித்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- ஒருவேளை விளையாடினால் அவர் வெற்றியோடு விடைபெற வேண்டும்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு குறித்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்தால் நான் அதிர்ச்சி அடைய மாட்டேன் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "அவர் தனது கரியர் பற்றி முடிவு எடுப்பார், ஆனால் நான் அதற்கு அதிர்ச்சி அடைய மாட்டேன். அவர் இளமையாக போவதில்லை."
"அவரை தவிர ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர். சுப்மன் கில் இருக்கிறார். அவரது சராசரி கடந்த ஆண்டில் மட்டும் 40 ஆக இருக்கிறது, ஆனால் அவர் விளையாடவில்லை. அது உங்கள் மூளையை அரித்துக் கொண்டே இருக்கும்."
"இதனால் அவர் அந்த (ஓய்வு) முடிவை எடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். எதுவாயினும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தாலோ அல்லது இதற்கு பின் தகுதி பெற முடியும் என்றாலோ இது முற்றிலும் வேறான விஷயம். இதுதவிர நான் நினைப்பது எல்லாம், இது ஒரு வாய்ப்பு மட்டும் தான் - ஒருவேளை அவர் விளையாடினால் அவர் வெற்றியோடு விடைபெற வேண்டும்," என்று தெரிவித்தார்.