விளையாட்டு

தங்கப் பதக்கம்..750 கிலோ லட்டுகள்.. வினேஷ் போகத் வருகையை கொண்டாடித் தீர்த்த கிராம மக்கள் - வீடியோ

Published On 2024-08-18 09:04 GMT   |   Update On 2024-08-18 09:04 GMT
  • அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார்.
  • வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்றைய தினம் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாலை மரியாதைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கி ஊர் மக்கள் வினேஷ் போகத்தை உச்சி முகர்ந்து வருகின்றனர். வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது.

வினேஷ் போகத்தை கவுரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைத்து அவருக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினர். ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து காசு போட்டு வினேஷ் போகத்துக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளனர்.

தனது உறவினரும் குருவுமாக மகாவீர் சிங் கிடம் ஆசி பெற்ற அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஊர் மக்களின் அன்பு குறித்து வினேஷ் போகத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை.

எனக்கு இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நபிக்கையை கொண்டு சரியான திசையில் பயணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னதாக வினேஷ் கூறியபடி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Tags:    

Similar News