செய்திகள்

ஆம்பூர் அருகே சிம்கார்டு வினியோகஸ்தரை தாக்கி ரூ.8 லட்சம் பறிப்பு

Published On 2016-06-07 12:00 IST   |   Update On 2016-06-07 12:00:00 IST
ஆம்பூர் பஸ்நிலையம் அருகே சிம்கார்டு வினியோகஸ்தரை தாக்கி ரூ.8 லட்சம் பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணபிரசாத் (வயது 37). இவர் ஆம்பூரில் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தின் சிம்கார்டு வினியோகஸ்தராக உள்ளார்.

இவரது சிம்கார்டு விற்பனை நிலையம் ஆம்பூர் பஸ் நிலையத்தை அடுத்த வணிக வளாகத்தில் உள்ளது. அங்கு ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிம்கார்டு விற்பனையாளர்கள் இவரிடம் சிம்கார்டுகளை வாங்கி சென்று விற்று வருகின்றனர். கடையில் வேலைபார்க்கும் ஊழியர்கள் அவர்களிடம் பணத்தை வசூல் செய்து சரவணபிரசாத்திடம் ஒப்படைப்பர். மேலும் செல்போன்களுக்கு ரீசார்ஜும் இங்கு செய்து கொடுக்கப்படுகிறது.

தினமும் காலை இருசக்கர வாகனத்தில் தனது விற்பனை நிலையத்துக்கு வரும் சரவணபிரசாத், இரவு நிறுவனத்தில் வசூலான பணத்துடன் வீடு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் விடுமுறை நாளாகும். இந்த நிலையில் நேற்று காலை தனது விற்பனை நிலையத்துக்கு சரவண பிரசாத் வந்தார். சிம்கார்டு விற்பனை மற்றும் ரீசார்ஜ் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரை வசூலானது. இதனையடுத்து விற்பனை நிலையத்தில் கணக்கு வழக்குகளை சரிபார்த்து விட்டு வசூலான ரூ.8 லட்சத்தை அவர் தனது பையில் வைத்துக்கொண்டார்.

இரவு 9 மணியளவில் விற்பனை நிலையத்தை பூட்டிவிட்டு பணம் இருந்த பையுடன் தனது வாகனத்தை எடுப்பதற்காக வந்தார். அங்கு ஆட்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் மோட்டார் சைக்கிளிலேயே அமர்ந்திருந்தான். மற்றொருவன் கீழே இறங்கி சரவணபிரசாத்தை நெருங்கினான். அடுத்த வினாடியே அவரது கண்ணில் குத்திவிட்டு பணம் இருந்த பையை பறித்துக்கொண்டு தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டான். உடனே இருவரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர்.

ரூ.8 லட்சத்துடன் பையை பறிகொடுத்த சரவணபிரசாத் ‘திருடன்’ ‘திருடன்’ என சத்தம்போட்டார். அருகில் இருந்தவர்கள் அந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 கொள்ளையர்களும் தங்களை பிடிக்க வருபவர்களை திசைதிருப்ப ‘திருடன்’ ‘திருடன்’ என கத்தியவாறே வேகமாக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப்கென்னடி தலைமையில் அங்கு வந்தனர். நடந்த சம்பவம் குறித்தும், தப்பி ஓடிய கொள்ளையர்கள் எந்த வழியாக சென்றனர் என்பது குறித்தும் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

சரவணபிரசாத் தினமும் பணத்துடன் வீடு திரும்புவதை நோட்டமிட்ட நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதியில் சிம்கார்டு வினியோகஸ்தரை தாக்கி ரூ.8 லட்சத்தை துணிகரமாக 2 கொள்ளையர்கள் பறித்துச்சென்ற சம்பவம் ஆம்பூரில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News