செய்திகள்

இவரல்லவோ உண்மை ஊழியர்: வேலையில்லாமல் சம்பளம் வாங்குவது வேதனையளிப்பதாக டிரைவர் தர்ணா போராட்டம்

Published On 2016-06-07 16:08 IST   |   Update On 2016-06-07 16:32:00 IST
வேலையில்லாமல் சம்பளம் வாங்குவது வேதனையளிப்பதாக கூறி மின்வாரிய டிரைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கனரக வாகன டிரைவராக பணியாற்றி வருபவர் ரவி.

இவர் திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “கடந்த 17 மாதங்களாக தனக்கு வேலை எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் மாதம் ரூ.42 ஆயிரம் அரசு ஊதியம் வழங்குகிறது. வேலையில்லாமல் சம்பளம் வாங்குவது எனக்கு மன வேதனை அளிப்பதாக உள்ளது.

அதிகாரிகளிடம் பணி வழங்குமாறு பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறேன்” என்றார்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி கோட்டப் பொறியாளர் குமாரிடம் கேட்ட போது, “டிரைவர் ரவி ஓட்டி வந்த வாகனம் பழுதானதால், மாற்று வாகனம் வழங்க தாமதம் ஏற்பட்டு விட்டது. தற்போது மாற்று வாகனத்துக்கான ஏற்பாடுகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

விரைவில் அவருக்கு புதிய வாகனம் வழங்கி பணி ஒதுக்கீடு செய்யப்படும். இது தொடர்பாக அவரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவரும் போராட்டத்தை கைவிட்டதாக தெரிவித்தார் என்றார்.

Similar News