செய்திகள்

சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி: பணியில் கவனக்குறைவாக இருந்த சக ஊழியர் கைது

Published On 2016-06-23 03:53 GMT   |   Update On 2016-06-23 03:53 GMT
சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வயர்மேன் பலியான சம்பவத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்த சக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன் விளையை சேர்ந்தவர் மரியதுரை (வயது 37). இவர் முதலூர் பொத்தகாலன்விளை பகுதி வயர்மேனாக உள்ளார். நேற்று மாலை சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சித்திரை கனி என்பவரது தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

இதை சரிசெய்வதற்காக மரியதுரை, லைன் மேன் ஐகோர்ட்(35) என்பவருடன் சித்திரை கனி தோட்டத்துக்கு சென்றார். பின்னர் மரியதுரை பம்புசெட் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்து கொண்டிருந்தார். லைன் மேன் ஐகோர்ட் மின் கம்பம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மரியதுரையை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மரியதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான் குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பலியான மரியதுரையின் மனைவி மரியலூர்து பெர்னாண்டோ தட்டார்மடம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், எனது கணவர் மரியதுரை மின் கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்துள்ளார்.

முன்னதாக மின் கம்பம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டிக்காமல் பணியில் லைன் மேன் ஐகோர்ட் கவனக்குறைவாக இருந்ததால் எனது கணவர் மரியதுரை மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்.

எனவே ஐகோர்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி வழக்குப்பதிவு செய்து லைன் மேன் ஐகோர்ட்டை கைது செய்தனர். மரியதுரைக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News