பெண் மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது: திண்டுக்கல் மலை கிராமங்களில் போலீஸ் அதிரடி சோதனை
திண்டுக்கல்:
கரூர் வெங்கமேடு பகுதியில் பெண் மாவோயிஸ்டுகளான சந்திரா, கலா ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தொழிலாளர்களை வளைக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இவர்களில் சந்திரா தனது வாக்குமூலத்தில் சொந்த ஊர் திண்டுக்கல் என கூறியுள்ளார்.
எனவே கியூ பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் திண்டுக்கல் வந்தனர். இந்த குழுவினர் மலை கிராமமான சிறுமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் பெண்கள் நடமாட்டம் இருந்தாலும் அவர்களை வழி மறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதி நவீன் பிரசாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இவனது கூட்டாளிகள் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டனர். பல ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். அவ்வப்போது போலீசார் மலைக்கிராமங்களில் மாறுவேடத்தில் மலை கிராமங்களில் நோட்டம் போட்டு வருகிறார்கள்.
தற்போது பெண் மாவோயிஸ்டுகள் பிடிபட்டுள்ளதால் தேடுதல் வேட்டை மலை கிராமங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
போலீஸ் நடமாட்டம் உள்ளதால் விவசாய தொழிலாளர்கள் கலக்க மடைந்துள்ளனர்.