மணப்பாறையில் வீட்டு முன்பு விளையாடிய 2 வயது குழந்தை கடத்தல்
மணப்பாறை:
திருச்சி அரபுகுள சந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு சாய்தர் ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
பிரகாஷ் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே பிரகாஷின் தாயார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளவும், அருகில் இருந்து கவ னித்து கொள்ளவும் பிரகாஷ் விடுப்பு எடுத்து திருச்சி வந்தார்
அவருடன் மனைவியும், குழந்தையும் வந்திருந்தனர். பிரகாஷின் தாயாருக்கு கேன்சர் நோய் வந்திருப்பதால் அது குழந்தைக்கு எளிதில் தொற்றிவிடும் என்று அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கூறியுள்ளனர். எனவே குழந்தையை அவரது தாய் முத்துலட்சுமியுடன் மணப்பாறையில் உள்ள மாமியார் வீட்டில் பிரகாஷ் விட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மணப்பாறை நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட அத்திக்குளம் பகுதியில் உள்ள வீட்டின் வெளியே குழந்தை சாய்தர் ஷன் பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து இரண்டு நபர்கள் வந்துள்ளனர். திடீரென்று அவர்கள் வீட்டு முன்பு தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சாய்தர்ஷனை தூக்கினர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் கடத்திக்கொண்டு மின்னலாய் மறைந்தனர்.
இதைப்பார்த்து குழந்தையுடன் விளையாடிய பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுமி கலையரசி கூச்சல் போட்டார். உடனே சாய்தர்ஷனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர். குழந்தை கடத்தப்பட்டதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள்களை எடுத்துக்கொண்டு அந்த பகுதி முழுவதும் தேடினர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் குறித்தும், அடையாளங்கள் குறித்தும் விசாரித்தனர். உயர் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி மாவட்ட எல்லை வரையிலும், தேசிய நெடுஞ்சாலைகள், பைபாஸ் சாலைகள் அனைத்திலும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் குழந்தையுடன் வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிடவும், விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு (சி.சி.டி.வி.) கேமிராவில் பதிவான காட்சி பதிவுகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றார்களா? அல்லது நரபலி மற்றும் விற்பதற்காக கடத்தி சென்றார்களா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நெருக்கம் மற்றும் பரபரப்பாக இயங்கும் இந்த பகுதியில் தான் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.