செய்திகள்

கட்சியை இணைக்கும் அவசியம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் வந்தது?: நாஞ்சில் சம்பத் ஆவேசம்

Published On 2017-08-19 14:23 IST   |   Update On 2017-08-19 14:23:00 IST
கட்சியை இணைக்கும் அவசியம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் வந்தது? என டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை:

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் இன்று பெசன்ட் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இரு அணிகள் இணைவது தொடர்பான வி‌ஷயத்தில் டி.டி.வி.தினகரன் கவலைப்படும் நிலையில் இல்லை. அனைத்து அறை கூவல்களை எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளார்.

ஆட்சி இருக்கும் தைரியத்தில் விதை நெல்லை விற்க துடிக்கிறார்கள். நேற்று நடந்த கேலிக்கூத்தை நீங்கள் அறிவீர்கள். இனிமேலும் கேலிக்கூத்து நடத்த முடியுமே தவிர அ.தி.மு.க.வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

ஆட்சியை கவிழ்க்கவோ, முடிவு கட்டவோ எங்கள் தரப்பினர் யாரிடமும் சொல்லவில்லை. உண்மையான தொண்டர்கள் டி.டி.வி. தினகரன் பக்கம் உள்ளனர்.

ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. துணை பொதுச்செயலாளரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம் என சிலர் துணிந்து அறிவிக்கிறார்கள். அப்போது பன்னீர்செல்வம் அணியினர் புதிய நிபந்தனை விதித்துள்ளதாக அறிகிறேன். எந்த நிபந்தனையும் எங்களை கட்டுப்படுத்தாது.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை உள்ளது. ஓ.பி.எஸ். ஆட்சியில் இருந்தபோது விசாரணை கமி‌ஷன் ஏன் அமைக்கவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது அரசுக்கு எதிராக செயல்பட்டார். இப்போது அவரை இணைக்க வேண்டும் என துடிக்கிறார்கள்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அவதாரபுரு‌ஷன் கிடையாது. தமிழகம், குஜராத் கிடையாது. ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. அள்ளி சுருட்ட வேண்டும் என்ற அவசர கதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. கிணற்று தண்ணீரையே ஓ.பி.எஸ். கொடுக்க மறுக்கிறார். ஆவணியில் அறுவை சிகிச்சை நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News