முத்துப்பேட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவர் கழுத்தை நெரித்து கொலை: நண்பர் கைது
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் ரெயில்வே லைன் பகுதியில் வசித்து வருபவர் அப்பு அஜீஸ். இவரது மகன் மாசிக் அகமது (14). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை இவரது வீட்டில் வளர்க்கும் ஆட்டுக்குட்டி காணாமல் போனது. அதனை தேடி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.
அப்போது நாச்சிகுளம் ரெயில்வே லைன் அருகே மாசிக் அகமது பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கொலை செய்யப்பட்ட மாணவர் பிணத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாசிக் அகமது நண்பர் அபுகலாம் ஆஷாத் (16) தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
அவர் திருத்துறைப்பூண்டியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அபுகலாம் ஆஷாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அப்போது அவர், தனது நண்பர் மாசிக் அகமதுவை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். மாசிக் அகமது தன்னுடைய செல்போனை உடைத்து விட்டதாகவும் அதனை சரி செய்து தருமாறு அவர் கூறியதால் ஆத்திரம் அடைந்து மாசிக் அகமதுவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்தார்.