மணல் லாரி மோதி பெண் படுகாயம் - மணல் குவாரியில் கொட்டகைக்கு தீ வைப்பு
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள சிவன்வாயல் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடுமண் குவாரி இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். எனினும் மனல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிவன்வாயல் கிராமத்தை சேர்ந்த பத்மினி (வயது 48) என்பவர் காவனூர் சாலையை கடக்க நடந்து சென்றார்.
அப்போது மின்னல் வேகத்தில் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி திடீரென பத்மினி மீது மோதியது. இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்த டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மணல் குவாரிக்குள் கும்பலாக சென்றனர். அங்கு போடப்பட்டு இருந்த 3 கொட்டகைகளுக்கு தீ வைத்தனர்.
மேலும் குவாரியில் இருந்த தொழிலாளிகளை அடித்து விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணல் ஏற்ற வந்த லாரிகள் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்களை அங்கேயே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டுள்ள லாரிகள், ஜே.சி.பி. எந்திரங்களை பாதுகாப்புடன் வெளியேற்றி வருகின்றனர்.