செய்திகள்
விஜயகாந்த்

இல்லம் தேடி கல்வி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- விஜயகாந்த்

Published On 2021-11-03 12:17 IST   |   Update On 2021-11-03 12:17:00 IST
தமிழக அரசு செயல்படுத்தி உள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது அவசியமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இந்த திட்டம் மக்களிடையே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது.

எனவே இல்லம் தேடி கல்வி திட்டம் அவசியமா? என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நவம்பர் 1-ந்தேதி “தமிழ்நாடு நாள்” என அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் தேதியை மாற்றுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News