ஒரே இடத்தில் 60 காட்டுயானைகள் முகாம்- 10 கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
- சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர்.
- விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே 4 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் மேலும் யானைகள் வந்துள்ளன. இதனால் அப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதிகாலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும்.
இந்நிலையில் இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து, நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் சென்றன.
அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி, ஆழியாளம் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிர்கள் சேதப்படுத்தியுள்ளன. இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சானமாவு வனப்பகுதியில் சுமார் 60 யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளன. அதனால் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனால் விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆழியாளம் உள்பட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.