தமிழ்நாடு

சிவகளை அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்

முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் தங்கப்பொருள் கண்டுபிடிப்பு

Published On 2022-08-11 07:59 GMT   |   Update On 2022-08-11 07:59 GMT
  • சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 வருடமாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தது.

இந்த ஆண்டு கடந்த மார்ச் மாத இறுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடந்து வருகிறது.

தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசிமணிகள், வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள ஒரு செங்கல் 25 சென்டி மீட்டர் நீளமும், 16 சென்டி மீட்டர் அகலமும், 5 சென்டி மீட்டர் உயரமும் உள்ளது.

இந்த நிலையில் தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது தெரியவில்லை. அந்த தங்கத்தில் மேல் சிறு சிறு கோடுகள் உள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பொறுத்த வரை இறந்தவர்களை புதைத்த இடத்தில் தான் தங்கப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News