நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த 6 பேர் மீது வழக்கு- குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
- ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
- மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
பிரபல தமிழ் நடிகை கவுதமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியை சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சால் சதீஷ்குமார், ஆர்த்தி, பாஸ்கரன் மற்றும் ரமேஷ் சங்கர் ஆகியோர் போல் ஆவணங்கள் தயாரித்து நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.