தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2024-09-11 04:37 GMT   |   Update On 2024-09-11 04:37 GMT
  • பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஆட்டோடெஸ்க் நிறுவனம், ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும்.
  • தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடந்தது.

சென்னை:

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4,350 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதியன்று சிகாகோவில், ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் மற்றும் தீர்வுகளை, பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஜாபில் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜாபில் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம், தொழிற்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். முதலமைச்சர் முன்னிலையில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஆட்டோடெஸ்க் நிறுவனம், ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டிடக்கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி மற்றும் பொழுதுபோக்கு தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. முதலமைச்சர் முன்னிலையில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே, தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடந்தது.

30 ஆண்டுகளாக தமிழகத்துடன் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது என பதிவிட்டு உள்ளார்.

சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த உற்பத்தியை கடந்த 2022-ம் ஆண்டுடன் அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News