கோவை மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் திடீர் தற்கொலை
- பையா கவுண்டருக்கு காளப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய மற்றொரு வீடும் உள்ளது.
- பையா கவுண்டரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கோவை:
கோவை காளப்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் (வயது65).
தி.மு.க பிரமுகரான இவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார்.
பையா கவுண்டருக்கு காளப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய மற்றொரு வீடும் உள்ளது. இந்த தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு வந்து விடுவார்கள்.
இன்று காலையும் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலைக்கு வந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை கேட்டதும் அவர்கள் பதறி அடித்துக்கொண்டு தோட்டத்திற்கு ஓடி வந்தனர். அங்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பையா கவுண்டரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பையா கவுண்டருக்கு கடந்த சில மாதங்களாகவே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் கடந்த 2006-ம் ஆண்டு காளப்பட்டி பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், கடந்த 2011-ம் ஆண்டு வரை காளப்பட்டி பேரூராட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார். பேரூராட்சி தலைவராக இருந்த போது, அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.
தி.மு.கவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு வரை கோவை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
மேலும் இவர் கடந்த 2016 மற்றும் 2021-ம் ஆண்டு என 2 முறை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டார். ஆனால் 2 தடவையும் அவருக்கு வெற்றி கிடைக்காமல் தோல்வியையே தழுவினார்.
2021 தேர்தலுக்கு பிறகு அவரது மாவட்ட செயலாளர் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒரு ஆண்டு காலமாக அவர் கட்சி பணிகளில் எந்தவித நாட்டமும் காட்டாமல் சற்று ஒதுங்கியே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.