தமிழ்நாடு

கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

Published On 2024-08-17 06:19 GMT   |   Update On 2024-08-17 06:19 GMT
  • கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

கோவை:

மேற்கு வங்க மாநிலத்தில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 17-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு மற்றும் டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதில் அங்கு பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் டீன் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலையில் நேர்மையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக தமிழ்நாடு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பெண் மருத்துவர் ஒருவரிடம் வடமாநில வாலிபர் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவத்தை குறிப்பிட்டு, மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்களின் பேராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த நோயாளிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News