நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
- மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பையில் 49 மில்லி மீட்டரும், கருப்பா நதி பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 32 மில்லி மீட்டரும், கடம்பூரில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
இதே போல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, நாங்குநேரி, கடனாநதி பகுதி, ராமநதி பகுதி குண்டாறு பகுதி, கொடு முடியாறு பகுதி, அடவி நயினார் அணைக்கட்டு, சங்கரன்கோவில், சிவகிரி, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிர பரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.
இந்நிலையில் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டை கடந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிர பரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நெல்லை மாவட்ட தாமிரபரணி பகுதிகளை கடந்து தண்ணீர் செல்வதால் நெல்லை மாவட்டத்திலும் தாமிர பரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 120.70 அடியாக உள்ளது. அணைக்கு 870.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதே போல் மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 86.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 133.89 கன அடியாகவும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்ட அணைகளை பொறுத்த வரையில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 113.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. கடனா நதி அணை 81.40 அடியாக உள்ளது.